செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு மார்ச் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.01.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 31.12.2022 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி. நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2023-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டிருந்தன.