கேள்வித்தாளை முன்கூட்டியே வழங்கிய விவகாரம்: பவானி பள்ளிக்கூட தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க உத்தரவு- முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தகவல்


கேள்வித்தாளை முன்கூட்டியே வழங்கிய விவகாரம்: பவானி பள்ளிக்கூட தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க உத்தரவு- முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தகவல்
x

பவானி பள்ளிக்கூடத்தில் முன்கூட்டியே கேள்வித்தாள் வழங்கிய விவகாரத்தில் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.

ஈரோடு

பவானி பள்ளிக்கூடத்தில் முன்கூட்டியே கேள்வித்தாள் வழங்கிய விவகாரத்தில் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.

பருவத்தேர்வு

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகரில் நகரவை நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக கிருஷ்ணகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் ஆசிரியையாகவும் உள்ளார். நேற்று முன்தினம் அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை முதல் பருவத்தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வு குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி இருந்தனர். எந்த வகையிலும் கேள்வித்தாள் கசிந்து விடக்கூடாது என்று தொடர் அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழ் தேர்வு நடந்தது.

கேள்வித்தாள்

பவானி காமராஜ் நகர் நகரவை நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வந்திருந்தனர். கேள்வித்தாள் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி காலை 9.30 மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 10 மணிக்கு தேர்வு தொடங்கப்பட வேண்டும். ஆனால், காலை 9.45 மணிக்கு தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி தேர்வுத்தாள் உறையை பிரித்து மாணவ-மாணவிகளிடம் வழங்கி ஒரு மணி நேரம் படிக்கும் படி கூறியதாக தெரிகிறது. பின்னர் 10.45 மணிக்கு முறையாக தேர்வு நடத்தாமல் மாணவ-மாணவிகளை கும்பலாக உட்கார வைத்து, ஒருவரை ஒருவர் பார்த்து எழுத வசதியாக தேர்வு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுபோல் பிற்பகலில் தேர்வு எழுத இருந்த 7-ம் வகுப்புக்கான கேள்வித்தாளையும் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கி படிக்கக்கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பான புகார்கள் வந்ததை தொடர்ந்து அவர் மீது மாவட்ட கல்வி அதிகாரி (பவானி) ராமசாமி நடவடிக்கை எடுத்தார்.

விளக்கம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி, அவரது பாடத்தை சரியாக எடுப்பதில்லை என்று புகார்கள் வந்தன. அவர் தமிழ் ஆசிரியை என்பதால், அவரது பாடத்தில் மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்து விடக்கூடாது என்று கேள்வித்தாளை கொடுத்து முறைகேடாக தேர்வு நடத்திய புகாரும் வந்தது. பள்ளிக்கூடத்துக்கு சென்ற பெற்றோர் சிலரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் இந்த புகாரை தெரிவித்தனர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவின.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பெ.அய்யண்ணன் கூறும்போது, 'தலைமை ஆசிரியை மீது பெறப்பட்ட புகாரின் பேரில் அவரிடம் விளக்கம் மட்டுமே கேட்டு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றார்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story