நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும்-ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
ஊட்டி
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
துணை வேந்தர்கள் மாநாடு
உயிர்கல்வி நிறுவனங்களில் பாடப் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னரும், தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்தது. 2-ம் உலகப் போருக்கு பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. இதனால் கணினி தேவை அதிகரித்தது. இதன் மூலம் கணினி கல்வி கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்ததால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு படை எடுத்தன.
காலம் மாற்றத்திற்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். எனவே மாணவர்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும்.
படிப்பிற்கு ஏற்ற வேலை
தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. தற்போது வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு காலத்திற்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்வியில் மாற்றம் அவசியம் செய்ய வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புவிசார் அரசியல் மாற்றங்கள்
சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இந்தியாவில் இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தாய் மொழியில் கற்பதை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவில் நடைபெறும் புவிசார் அரசியல் மாற்றங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. உலக அளவில் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா செயல்படுகிறது. திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகளை கவர முடியும். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றினைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாநில குழு தலைவர் ஜெகதீஷ் குமார் ஆன்லைன் மூலம் பேசினார்.
20 துணை வேந்தர்கள் பங்கேற்பு
இதில் பல்லைக்கழக துணை வேந்தர்கள் கவுரி (சென்னை), வேல்ராஜ் (அண்ணா பல்கலைக்கழகம்), கீதாலட்சுமி (வேளாண் பல்கலைக்கழகம்), சுகுமார் (ஜெயலலிதா மீன்வளம் பல்கலைக்கழகம்), பாரதி ஹரிசங்கர் (அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்), செல்வம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), வைத்திய சுப்ரமணியம் (சண்முகா கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்), செல்வகுமார் (டி.என். விலங்கியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்), சந்தோஷ்குமார் (அம்பேத்கர் சட்டக்கல்லூரி பல்கலைக்கழகம்), கர்மித் சிங் (காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகம்), ஜகன்நாதன் (பெரியார் பல்கலைக்கழகம்), கதிரேசன் (அண்ணாமலை பல்கலைக்கழகம்), திருவள்ளுவன் (தமிழ் பல்கலைக்கழகம்), குமார் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), நாராயணன் (கலசலிங்கம் கல்வியியல் பல்கலைக்கழகம்), சந்திரசேகர் (மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழகம்), ரவி (அழகப்பா பல்கலைக்கழகம்), ஸ்ரீமன்நாராயணன் (வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்), ஆறுமுகம் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்), கலா (மதர் திரேஷா பெண்கள் பல்கலைக்கழகம்), ஆறுமுகம் (தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்), நாராயணசாமி (எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தவர் காமராஜர்
துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் காலத்தில் இருந்து ஏராளமான மக்களுக்கு அடிப்படை கல்வி அறிவு கிடைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் பெரிய அளவில் ஊக்கமளித்தார். இதனால் கல்வியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தேசிய சராசரி கல்வி அறிவைவிட தமிழகத்தில் கல்வி அறிவு சதவீதம் இரட்டிப்பாக உள்ளது.
இருந்தாலும் அடிப்படை கல்வி அறிவை பெறுவதில் இன்றைய தேவைக்கேற்ப பாடத்திட்டங்கள் உள்ளதா என்பதில் கேள்வி எழுந்து உள்ளது, என்றார்.