ஈரோட்டில் பாகிஸ்தான் மந்திரியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வினர் 19 பேர் மீது வழக்கு
ஈரோட்டில் பாகிஸ்தான் மந்திரியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோட்டில் பாகிஸ்தான் மந்திரியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறாக பேசிய பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவால் பூட்டோவை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். அதன்படி பா.ஜ.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கவின் தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
வழக்கு
இதற்கிடையே பா.ஜ.க. வினர் சிலர் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவால் பூட்டோவின் உருவப்படத்தை கையில் ஏந்தி கோஷமிட்டனர். அப்போது அவர்கள் மந்திரியின் உருவப்படத்தை தரையில் போட்டு மிதித்து, செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், அந்த உருவப்படத்துக்கு தீ வைத்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்து உருவப்படத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்பட 19 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.