சிலம்பம் உள்பட பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி - மத்திய மந்திரி


சிலம்பம் உள்பட பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி - மத்திய மந்திரி
x

சிலம்பம் மட்டுமல்ல நம் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் ஒலிம்பிக்கில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உள்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரி நிஷித் பிரமானிக் கலந்து கொண்டு பிரதம மந்திரி ருத்ரா யோஜனா திட்டம் உள்பட பல்வேறு மத்திய அரசின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு விளையாட்டுத்துறை சார்பாக சிறப்பான பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாதம் பதிந்த இந்த பகுதியில் வருகை புரிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

விளையாட்டுத் துறையினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அதிகமான திட்டங்களை கொண்டுவந்து இளைஞர்களை சிறந்த வீரர்களாக உருவாக்குவதே எங்கள் துறையின் வெற்றி என கருதுகிறேன். அதற்காக விளையாட்டுத்துறையில் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு பின்பும், உக்ரைன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியிலும் இந்தியா அமைதியான நாடாக திகழ்கிறது. சிலம்பம் மட்டுமல்ல நம் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் ஒலிம்பிக்கில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லை என ராகுல் காந்தி நடை பயணத்தில் குற்றம் சாட்டுகிறார்.

கொரோனாவுக்கு பிறகு வேலைவாய்ப்பும் தடைப்பட்டது. அது செயற்கையாக ஏற்பட்டது. எதிர்காலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அனைத்து துறைகளும் திட்டமிட்டு செயல்படும். நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களுக்கும் எதிராக செயல்படுகின்ற இயக்கங்கள் பற்றி சம்பந்தப்பட துறைகள் சார்பாக விசாரிக்கப்பட்டு முழுமையான ஆய்வுக்குப்பின்னர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையை தடுப்பதற்காகவே தேச விரோத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதியில் போட்டியிடலாம் என்பதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். மாநிலங்களின் திட்டங்களின் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story