முட்டையின் சராசரி கொள்முதல் விலை 452 காசுகளாக உயர்வு


முட்டையின் சராசரி கொள்முதல் விலை 452 காசுகளாக உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் முட்டையின் சராசரி கொள்முதல் விலை 452 காசுகளாக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்

கோழிப்பண்ணைகள்

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை தொழிலாக தொடங்கப்பட்டது கோழிப்பண்ணை தொழில். விவசாயம் செய்து வந்த இங்குள்ள சிலர் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைந்து கொண்டே வந்ததால், விவசாயத்திற்கு மாற்றாக கோழிப்பண்ணைகளை தொடங்கினர். முதலில் ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் கோழிகளை மட்டுமே வளர்த்து வந்தனர். இருப்பினும் நாமக்கல் மாவட்ட மக்களின் கடின உழைப்பு காரணமாக கோழிப்பண்ணை தொழில் இங்கு வேகமாக வளர தொடங்கியது.

இதையடுத்து குடிசைகளில் தொடங்கப்பட்ட கோழிப்பண்ணைகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளுக்கு மாறின. ஒவ்வொரு பண்ணைகளிலும் கோழிகளின் எண்ணிக்கையும் சர்வ சாதாரணமாக 50 ஆயிரத்தை தொட்டன. பண்ணைகளின் தரமும் சர்வதேச தரத்திற்கு மாறியது. பண்ணைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், சரியான நேரத்திற்கு தண்ணீர், உணவு அளித்தல், மருந்து கொடுத்தல் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்ததால், கோழிப்பண்ணை தொழில் லாபகரமான தொழிலாக மாறியது.

4 கோடி முட்டைகள் உற்பத்தி

தற்போது நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ஐதராபாத்துக்கு அடுத்தாற்போல் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. ஆனால் முட்டை ஏற்றுமதியில் இந்திய அளவில் நாமக்கல் மண்டலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 90 சதவீத முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன.

கோழி தீவன மூலப்பொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் முட்டையின் கொள்முதல் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2020-21-ம் நிதி ஆண்டு நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் சராசரி கொள்முதல் விலை 4 ரூபாய் 16 காசுகள். ஆனால் அது கடந்த நிதியாண்டில் (2021-2022) 4 ரூபாய் 52 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதனை வைத்து பார்த்தால், கடந்த ஆண்டு முட்டையின் சராசரி கொள்முதல் விலை 36 காசுகள் உயர்ந்து உள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை முட்டையின் கொள்முதல் விலை 446 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்முதல் விலை

கடந்த 2012-ம் ஆண்டு முதல் நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் சராசரி கொள்முதல் விலை (காசுகளில்) வருமாறு:-

2012 - 309, 2013 - 335, 2014 - 306, 2015 - 338, 2016 - 374, 2017 -172, 2018 - 382, 2019 - 401, 2020 - 383, 2021- 416, 2022 - 452.

தீவன மூலப்பொருட்களின் விலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு 75 கிலோ கொண்ட ஒரு தீவன மூட்டையின் விலை ரூ.1,617 ஆக இருந்தது. அது தற்போது ரூ.2,200 ஆக உயர்ந்து உள்ளது. தீவன மூட்டையின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதே முட்டையின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு 75 கிலோ எடை கொண்ட ஒரு தீவன மூட்டை ரூ.1,858-க்கும், 2020-ம் ஆண்டு ரூ.1,597-க்கும், 2021-ம் ஆண்டு ரூ.1,996-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீவன மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் முட்டையின் உற்பத்தி செலவு அதிகரித்து, கொள்முதல் விலையும் உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story