நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 565 காசுகளாக உயர்வுபுதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி


நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 565 காசுகளாக உயர்வுபுதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து 565 காசுகள் என்கிற புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 4½ கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கான விலையை வாரத்தில் 3 நாட்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. இந்த முட்டை கொள்முதல் விலையானது தட்பவெப்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை ஒருவாரம் நீடித்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக உயர்ந்துள்ளது. புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் என்ன?

இந்த விலை உயர்வுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு, வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் அங்கு விற்பனை அதிகரிப்பு போன்றவையும், தமிழகம் மற்றும் கேரளாவில் பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதும் காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து வாங்குவதை கட்டுப்படுத்த முட்டைவிலை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.82 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story