மின்சாரம் தாக்கி முதியவர் பலி

புளியங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் முதியவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). சமூக சேவகர். இவர் நேற்று காலை 5.30 மணிக்கு பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது வெகு நாட்களாக பூட்டி கிடக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரது வீட்டுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து கிடந்தது. அதை கவனிக்காத ராமச்சந்திரன் அதில் மிதித்ததால் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுபற்றி தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், மாரியப்பன், லட்சுமணன் என்ற மகன்களும், ராமலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
முதியவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம், சிந்தாமணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






