தனித்தனி வரிசை ஏற்படுத்தாததால் முதியோர்கள் கடும் அவதி


தனித்தனி வரிசை ஏற்படுத்தாததால் முதியோர்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் மையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அங்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்தாததால் முதியோர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி, தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 471 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் உடனடி தீர்வின் மூலம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர கை மிதிவண்டி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், உதவி ஆணையர் (கலால்) சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதியோர்கள் கடும் அவதி

வாரந்தோறும் திங்கட் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து நேரடியாக மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமாேனார் வருகின்றனர். இவர்கள் கலெக்டரிடம் மனுக்கள் கொடுப்பதற்கு முன்பாக அந்த மனுக்களை பதிவு செய்ய கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் பதிவு செய்யும் மையம் இயங்கி வருகிறது. அங்கு ஏராளமானோர், நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்து நின்று மனுக்களை பதிவு செய்கின்றனர். இவர்களை வரிசையில் ஒழுங்குப்படுத்துவதில்லை. அதுபோல் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக வரிசையாக நிற்க அதிகாரிகள் எந்த ஏற்பாடும் செய்வதில்லை. இதனால் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருமே ஒரே வரிசையாக நெருக்கடியில் நின்று மனுக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் மனுக்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி முதியோர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்து நிற்க முடியாமல் சில சமயங்களில் மயக்கமடைந்து கீழே விழுகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிரமத்தை போக்கிடும் வகையில் மாவட்ட கலெக்டர், இதில் தலையிட்டு மனுக்களை பதிவு செய்யும் மையத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு என்று தனித்தனி வரிசையை ஏற்படுத்தி மனுக்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story