நாமக்கல் மாவட்டத்தில், அடுத்த மாதம் 9-ந் தேதி நகர, உள்ளாட்சி அமைப்புகளில் 16 பதவிகளுக்கு இடைத்தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் நகர, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 16 பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நகர, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 16 பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இடைத்தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 16 பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல் இளநகர் ஊராட்சியில் 2-வது வார்டிலும், மாவுரெட்டிபட்டி ஊராட்சியில் 2-வது வார்டிலும், வடவத்தூர் ஊராட்சியில் 2-வது வார்டிலும், சிறுநல்லிக்கோவில் ஊராட்சியில் 3-வது வார்டிலும், ராசிபாளையம் ஊராட்சியில் 9-வது வார்டிலும், மத்துருட்டு ஊராட்சியில் 5-வது வார்டிலும், ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில் 3-வது வார்டிலும், தட்டாங்குட்டை ஊராட்சியில் 11-வது வார்டிலும், செருக்கலை ஊராட்சியில் 9-வது வார்டிலும், கதிராநல்லூர் ஊராட்சியில் 1-வது வார்டிலும் தேர்தல் நடக்கிறது.
வேட்புமனு தாக்கல்
மேலும் மோளப்பாளையம் ஊராட்சியில் 8-வது வார்டிலும், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 8-வது வார்டிலும், சிறு மொளசி ஊராட்சியில் 4-வது வார்டிலும் உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வருகிற 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 30-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.
சட்டப்படி நடவடிக்கை
அதேபோல் அடுத்த மாதம் 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. வருகிற 14-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.