திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலி இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந் தேதி கடைசி நாள்


திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலி இடங்களுக்கான தேர்தல்    வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 21 Jun 2022 4:26 PM GMT (Updated: 21 Jun 2022 4:27 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலி இடங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந் தேதி கடைசி நாளாகும்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலி இடங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்புகள்

திருவாரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி நடைபெற உள்ளது.

ஊராட்சி தலைவர்கள்

அதன்படி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதில் குடவாசல் வட்டாரத்தில் நெடுஞ்சேரி (பொது), கொரடாச்சேரி வட்டாரத்தில் பத்தூர் (ஆதிதிராவிடர் பெண்), மன்னார்குடி வட்டாரத்தில் இடையூர் எம்பேத்தி (பொது), வலங்கைமான் வட்டாரத்தில் வடக்குப்பட்டம் (பொது) ஆகிய 4 ஊராட்சி தலைவர் பதவி காலி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

உறுப்பினர்கள்

காலியாக உள்ள 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி குடவாசல் வட்டாரத்தில் மணவாளநல்லூர் வார்டு எண்.5 (பொது பெண்), சீதக்கமங்கலம் வார்டு எண்.3 (ஆதிதிராவிடர் பொது), மன்னார்குடி வட்டாரத்தில் 54.நெம்மேலி வார்டு எண்.5 (பொது), வடகோவனூர் வார்டு எண்.2 (பொது), நீடாமங்கலம் வட்டாரத்தில் சித்தமல்லி மேல்பாதி வார்டு எண்.5 (ஆதிதிராவிடர் பொது), திருவாரூர் வட்டாரத்தில் கொட்டாரக்குடி வார்டு எண்.5 (ஆதிதிராவிடர் பொது), கோட்டூர் வட்டாரத்தில் நொச்சியூர் வார்டு எண்.4 (ஆதிதிராவிடர் பொது) ஆகிய 7 ஊராட்சி உறுப்பினர் காலி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல்

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு பெறப்படும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகும்.

வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 30-ந் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் அடுத்த மாதம் 15-ந் தேதி ஆகும்.

வாக்குச்சாவடிகள்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19 வாக்குச்சாவடிகளில் நடைபெறும். இதில் 2,991 ஆண் வாக்காளர்களும், 3,038 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,029 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story