ஓசூர் மல்லிகார்ஜூன சாமி கோவில் தேர்த்திருவிழா
மகா சிவராத்திரியையொட்டி ஓசூர் அருகே உள்ள மல்லிகார்ஜூன சாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஓசூர்
மகா சிவராத்திரியையொட்டி ஓசூர் அருகே உள்ள மல்லிகார்ஜூன சாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர்த்திருவிழா
ஓசூர் அருகே உள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் அம்ருதா மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் எஸ்.முதுகானப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சாமிக்கு திருக்கல்யாணம்
தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்து கோவிலுக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.