திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்
கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(ஊரக வளர்ச்சி) குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊரக பகுதிகளுக்கும், 3 நகர்புற பகுதிகளுக்கும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று(சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற வருகிற 14-ந் தேதி கடைசி நாளாகும். தேர்தல் வருகிற 23-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற்று, அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். 24-ந் தேதி அனைத்து தேர்தல் பணிகளும் முடிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல் கூட்டம் வருகிற 28-ந் தேதி நடைபெறும். தேர்தல் சம்பந்தமாக வேட்பு மனு செய்தல், வேட்பு மனுபரிசீலனை செய்தல், தேர்தல் நடத்துவது மற்றும் வாக்கு எண்ணிக்கை, பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முரளிதரன், குமாரி, அன்னப்பூரணி, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நகராட்சி ஆணையர்கள் குமரன், கீதா, சரவணன் மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.