தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது தர்மபுரியில் பாலகிருஷ்ணன் பேட்டி
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது தர்மபுரியில் பாலகிருஷ்ணன் பேட்டி
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி ஆற்றின் உபரிநீரை வறண்டு கிடக்கும் தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அரிசி உள்ளிட்ட உணவு சார்ந்த பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்பது அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பதாகும். எனவே அரிசி மீது போடப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 29-ந்தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள், இந்துத்துவா என்ற அடிப்படையில் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் மூலம் ஒருவார காலம் வீடு, வீடாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரியான கருத்து
மின்கட்டணத்தை உயர்த்தினால் தான் மானியம் வழங்குவோம். சொத்து வரியை உயர்த்தினால் தான் உள்ளாட்சிக்கு நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு சொல்வதை மாநில அரசு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதை மறுக்கின்ற உரிமை மாநில அரசுக்கு உள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
அரசு என்பது மதச்சார்பற்றது. அரசு அலுவலகங்களில் கோவில் கட்டக்கூடாது. குறிப்பிட்ட மத அடையாளங்களை ஏற்படுத்த கூடாது என்று அரசாணை உள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பும் உள்ளது. இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் இந்து மத முறைப்படி மட்டும் பூஜை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கூறியது சரியான கருத்து. மத வழிபாடு மற்றும் பூஜை கொண்டாட்டங்களை வேண்டாம் என்று நாம் கூறவில்லை. அதற்குரிய இடங்கள், விழாக்களில் மதம் சார்ந்த பூஜை மற்றும் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.