போதமலையில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது: மேலூர், கெடமலைக்கு மின் வினியோகம் பாதிப்பு மாணவர்கள், விவசாயிகள் அவதி


போதமலையில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது:  மேலூர், கெடமலைக்கு மின் வினியோகம் பாதிப்பு  மாணவர்கள், விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:45 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதமலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலூர் மற்றும் கெடமலை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் செயல்படவில்லை.

இதனால் அங்கு 1 மாதமாக மின்சார வினியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெடமலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர். அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் சரிவர செயல்படவில்லை என்பதால் அங்கு மின்சார வினியோகம் இல்லை என தெரிகிறது. சரிவர மின் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போதமலையை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கெடமலை மற்றும் மேலூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை கீழே கொண்டு வருவதற்கு சாலை வசதி இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் உதவியுடன் தான் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை கீழே கொண்டு வர முடியும். எனவே அங்குள்ள மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புதிய டிரான்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் உள்ளது. அங்குள்ள மக்கள் ஒத்துழைப்பு தந்தால் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர்களை அங்கு வைத்து மின் வினியோகம் செய்ய முடியும் என்றார்.


Next Story