பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது - பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்


பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது - பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்
x

மாமல்லபுரத்தில் பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுவதாக அதிகாரிகள், என்ஜினீயர்கள் மீது கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளில் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வதாலும், முக்கிய பிரமுகர்கள் பலர் இங்கு வர உள்ளதாலும் மாமல்லபுரம் நகர பகுதியை அழகுபடுத்த தமிழக அரசு தனியாக நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.

அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் சாலைகளை சீரமைத்தல், சாலையின் இரு பக்கங்களிலும் நடைபாதை கற்கள் பதித்தல், புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு பொருத்துதல், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் செஸ் போட்டி ஆய்வுக்காகவும், மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிக்கவும் போட்டி நடைபெறும் நட்சத்திர ஓட்டலுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் பூபதி, சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்துடன் கலெக்டரிடம் காட்டி தரமற்ற முறையில் நடைபாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பேரூராட்சி என்ஜினீயர்கள், அதிகாரிகள் சிலரின் அலட்சிய போக்கால் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டுவதால் பல வீடுகளின் மின்சார வயர் துண்டிக்கப்பட்டு பல குடும்பத்தினர் மின்தடையால் அவதிக்குள்ளாவதாக கூறினர்.

குடியிருப்பு இல்லாத பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு, வருவதாகவும் புராதன பகுதியான ஐந்துரதம், கோவளம் சாலை, கங்கை கொண்டான் சாலை பகுதியில் எந்தவித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார் தெரிவித்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்துடன் அவரிடம் மனுக்கள் வழங்கினர். மின்சார வயர் துண்டிப்பு குறித்து அந்த பணிகள் மேற்கொள்ளும் அதிகாரிகளிடம், புகார் கூறி கவுன்சிலர்கள் முன்னிலையிலேயே கலெக்டர் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் கூற முடியாமல் மழுப்பினர். மின்சார வயர்கள் துண்டிப்பு இல்லாமல் பணிகளை செய்ய அவர் அறிவுறுத்தினார்.


Next Story