பள்ளி மாணவியை கடத்திய எலக்ட்ரீசியன் கைது
புதுப்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திய எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி, வடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு, மாணவி, வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவியை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் புதுப்பேட்டை அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் மகன் எலக்ட்ரீசியன் விஜயராமன் (வயது 21) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயராமனை கைது செய்தனர். மேலும் மாணவியையும் மீட்டனர்.