கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் சாவு
பேட்டையில் கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி.பி. 5-வது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது மகன் சேக் மைதீன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, இக்பால், முகமது ஆசிக் ஆகியோருடன் பேட்டை ஆதம்நகர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
அங்கு கிணற்றில் இறங்கி அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சேக் மைதீன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை நண்பர்கள் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் முத்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி, சேக் மைதீனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.