தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
x

கரூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

எலக்ட்ரீசியன் பலி

கரூர் அருகே உள்ள சின்ன கோதூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 43). எலக்ட்ரீசியன். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் கதிர்வேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கதிர்வேல் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கதிர்வேல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

நொய்யல்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கணபதிபாளையம் ஆறுமுக கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தமிழரசு (27). இவர் தனது மோட்டார் பைக்கில் கரூர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள பன்றிக்கடை எதிரில் ரோட்டின் ஓரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது புன்னம்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையின் குறுக்கே சென்றார்.இதனால் தமிழரசு மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் நிலைதடுமாறி தங்களது மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தமிழரசு மட்டும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்த குறித்து தமிழரசுவின் மனைவி சூர்யா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்து, விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story