வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை


வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை
x

கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த ரோஷணை காந்தி நகரை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சரவணன் (வயது 28). இவருக்கும் திண்டிவனம் சந்தை மேடு ப.உ.ச. நகர்பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் எலக்ட்ரீசியன் அன்பு என்கிற அன்பழகன் (30) என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 28-5-2017 அன்று சரவணன் அணிக்கும், அன்பு அணிக்கும் இடையே கிாிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், லோகேஷ், மணிகண்டன், சதீஷ், பாலாஜி, முத்தரசன், செந்தில், முருகன், ரங்கநாதன் ஆகியோருடன் திண்டிவனம் சந்தை மேடு தனியாா் பள்ளி எதிரே அமைக்கப்பட்டு வரும் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் சரவணன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அவரை வழிமறித்த அன்பு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தி கொலை செய்தாா். இது குறித்த புகாரின் போில் ரோஷணை போலீசாா் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீா்ப்பு அளித்தார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்புவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி (பொறுப்பு) ரகுமான் தீர்ப்பு அளித்தார். மேலும் அபாராத தொகையில் ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்ட சரவணன் குடும்பத்துக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story