தனியார் சொகுசுபஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி


தனியார் சொகுசுபஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே அரண்மனை-4 படப்பிடிப்புக்காக சென்றபோது தனியார் பஸ்மோதி சினிமா ஊழியர் பலியானார். வாகனத்தின் பஞ்சரான டயரை அகற்றி மாற்று டயர் பொருத்தியபோது இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

எலக்ட்ரீசியன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மேல்பாதிரி கிராமம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பூபாலன் மகன் கந்தன்(வயது 37). தனியார் சினிமா நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வரும் இவர் தென்னிந்திய சினி டி.வி., போட்டோ பிளட் ஒர்க் யூனியன் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கந்தன் நேற்று முன்தினம் இரவு அரண்மனை-4 என்ற சினிமா படப்பிடிப்புக்காக சூட்டிங் வாகனத்தில் எலக்ட்ரிக் சம்பந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். தென்காசி மாவட்டம் பொய்கை, திரிபுரசுந்தரபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா(37) என்பவர் வாகனத்தை ஓட்டினார்.

சொகுசுபஸ் மோதியது

நேற்று அதிகாலை சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் சிறுதானிய உணவகம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து வாகனத்தை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். பின்னர், பஞ்சரான டயரை மாற்றி விட்டு புதிய டயரை மாற்றும் பணியில் இருவரும் ஈடுபட்டனர்.

அப்போது ராஜா வாகனத்தின் அடியில் படுத்துக்கிடந்து புது டயரை மாட்டிக்கொண்டிருந்தார். கந்தன் சாலையில் படுத்து கிடந்தபடியே டிரைவருக்கு டார்ச் லைட் அடித்து காண்பித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் சொகுசுபஸ் எதிர்பாராதவிதமாக சூட்டிங் வாகனத்தின் மீது மோதியது.

உடல் நசுங்கி பலி

இதில் சூட்டிங் வாகனத்தின் பின்பக்க டயர் சாலையில் படுத்துக்கிடந்த கந்தன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பிய ராஜாவை அந்த வழியாக வந்தவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த விபத்து குறித்து அவரது அண்ணன் ஆறுமுகம்(40) கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சினிமா படப்பிடிப்புக்காக சென்றபோது தனியார் சொகுசுபஸ் மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story