மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே!
மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே என்ற குரல்கள் ஒலிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.
தத்தளிக்கிறது
மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடி கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாதந்தோறும்
2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?
தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள். தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-
திரும்பப்பெற வேண்டும்
பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த பழ வியாபாரி பாரதி:- தமிழகத்தில் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் செலவாக அமையும். 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தினால் மின் கட்டணம் கட்ட வேண்டியதில்லை என்று கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கக்கூடிய வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை ஏற்கனவே அரசு இலவசமாக கொடுத்துள்ளது. அவற்றை பயன்படுத்தினால் 100 யூனிட்டை தாண்டி விடுகிறது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த முறையைவிட அதிகமாக மின் கட்டணம் வரும். எனவே அரசு 200 யூனிட் வரை பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. அல்லது மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
மாதந்தோறும் கட்டணம்
பெரம்பலூரை சேர்ந்த இல்லத்தரசி வசந்தா ராஜேந்திரன்:- ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு தற்போது மின் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மின் கட்டண உயர்வால் அதற்கென்று சம்பளத்தில் ஒரு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மின் ஊழியர்கள் மீட்டரில் கணக்கீடு செல்வதில் குளறுபடி ஏற்படுகிறது. இதனால் மின் கட்டணம் செலுத்த போகும்போது, அங்குள்ள அலுவலர்கள் கணக்கீடு செய்த தொகையை விட கூடுதல் தொகை வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது. மின் மிகை மாநிலம் என்று கூறக்கூடிய தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதந்தோறும் கணக்கீடு செய்து, மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.