ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி


ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x

தற்காலிக மின்இணைப்பை நிரந்தரமாக்கி தருவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

ஆவடியை அடுத்த மோரை வெள்ளானூர் கிராமம் விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், காலி மனை வாங்கி அதில் வீடு கட்டினார். இதற்காக காலிமனையில் தற்காலிகமாக மின்இணைப்பு பெற்று இருந்தார்.

தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்டதால் தற்காலிக மின்இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றித்தரும்படி வீராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது மின் வாரிய வணிக ஆய்வாளர் அன்பழகன் (58) என்பவர், சுரேஷிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மாற்றித்தருவதாக கூறினார்.

மின்வாரிய அதிகாரி கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மின்வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து அதனை அன்பழகனிடம் லஞ்சமாக கொடுக்கும்படி அறுவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்று காலை ஆவடி வீராபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற சுரேஷ், ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அன்பழகனிடம் லஞ்சமாக கொடுத்தார். அதனை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமத்ரா உள்ளிட்ட போலீசார் பாய்ந்து சென்று அன்பழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story