மின் மீட்டர் எரிந்து நாசம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி


மின் மீட்டர் எரிந்து நாசம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
x

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மின் மீட்டர் எரிந்து நாசமானதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அரசு மருத்துவமனை

ஆலங்குடியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி உயர் மின் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் உள்ள 4 மின் மீட்டர்களில் தீவிபத்து ஏற்பட்டது. மேலும் மின்சாதன பொருட்களும் எரிந்து நாசமானது.

இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 2 பேர் உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலிலும், வரண்டாவிலும் அமர வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

பராமரிப்பு பணிகளில் தொய்வு

இதனைதொடர்ந்து ஆலங்குடி மின்வாரிய ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மின்விசிறி, டியூப் லைட் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சரிவர கிடைக்காததால் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் மின்தடை காரணமாக அன்றாட மருத்துவ பணிகளில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலர் கூறியதாவது:- ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி உயர் மின் அழுத்தம் காரணமாக மின் மீட்டர்களில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

மின்சாதன பொருட்கள்...

இதையடுத்து இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலிலும், வரண்டாவிலும் அமர வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்னர் நோயாளிகள் சிலர் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் புதுக்கோட்டை உள்பட பிற அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்கள்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த 6 நாட்களாக பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மின்சாதன பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் நோயாளிகளின் நலனை காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story