திருப்பூரில் இருந்து 46 தொழில் அமைப்பினர் திரளாக பங்கேற்கிறார்கள்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி சென்னையில் 16-ந் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்பினர் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி சென்னையில் 16-ந் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்பினர் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
மின்கட்டண உயர்வால் பாதிப்பு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பீக்ஹவர் மின்கட்டண உயர்வு, மின்சார நிலைக்கட்டண உயர்வு, சூரியஒளி சக்தி மின்உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பு ஆகியவை தொழில்துறையினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நிலைபாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபிநாத் பழனியப்பன், டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகளின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உண்ணாவிரதம்
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாத் பழனியப்பன், முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:-
சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 16-ந் தேதி சென்னையில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். திருப்பூர் அனைத்து தொழில் அமைப்புகளின் சார்பில் சைமா, டீமா, டெக்பா, டெக்மா, நிட்மா, காம்பேக்டிங், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், எம்ப்ராய்டரி, பவர்டேபிள் உள்பட 46 சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்குள் முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவித்து சிறு, குறு, நடுத்தர தொழிலை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பல்லடத்தில் நாடா இல்லா தறி நெசவாளர் சங்கத்தின் சிஸ்வா ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. வழக்கமான மின் கட்டணத்தைவிட 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் இந்த உயர்வை வாபஸ் பெறவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு இல்லை. எனவே மின் கட்டண உயர்வை குறைக்க கோரி சென்னையில் வருகிற 16-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.