மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த மின்கட்டணமே நிர்ணயம் -அமைச்சர் பேட்டி


மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த மின்கட்டணமே நிர்ணயம் -அமைச்சர் பேட்டி
x

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர்,

மத்திய அரசும், மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையமும் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கடிதங்கள் அனுப்பினர்.

ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி மின்கட்டணம் திருத்தியமைக்க ஆலோசிக்கப்பட்டு, ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, அதன் மூலம் 7,338 பேர் நேரிலும், மெயிலிலும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். 3½ கோடி மின்நுகர்வோர் இருக்கும் சூழ்நிலையில் 7,338 பேர் மட்டும் கருத்துகளை தெரிவித்தனர்.

மிக குறைந்த அளவு கட்டணம்

தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் 1 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் என்பது, 93 சதவீதம் பேருக்கு 50 பைசா மின்கட்டணம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு, 19 லட்சத்து 28 ஆயிரம் பேர் வணிக நுகர்வு பயன்படுத்துவோருக்கு 50 பைசா கட்டணம்தான் உயர்த்தப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மின்சார வாரியத்திற்கு தேவையான நிதிகளை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஒழுங்குமுறை ஆணையத்திடம் சொல்லப்பட்ட கருத்துகளில் பெரும்பான்மையான கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அனைத்து மின் கட்டணமும் மிக குறைவாகவே இருக்கின்றன. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் டேட்டா சென்டர்களுக்கு மட்டும் 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கான கூடுதல் மின்தேவை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் புதிய தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில்...

கடந்த ஓராண்டில் ரூ.2,200 கோடி அளவிற்கு மின்சார வாரியத்தில் சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற ஆண்டுகளில் செலவினங்கள், வட்டிகள் குறைப்பது, வாரியத்தின் கடன் சுமையை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்உற்பத்தியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story