தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 4:00 AM IST (Updated: 12 Sept 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய எண்ணும் எழுத்தும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும். பி.எட். பயிற்சி பெற்ற மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுப்பக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். சஜி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமானவர்கள் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர்.

கைவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் விவரங்களை எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. சி.ஆர்.சி. உள்பட பல்வேறு பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதேபோல் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர்.

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அண்ணாதுரை, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜெயசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் பிராங்கிளின், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் எம்.பி.குமார், பொருளாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கூறும்போது, எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த முடியவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதேபோல் எமிஸ் செயலியில் பதிவேற்றம், பயிற்சி முகாம்கள் என ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story