தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கி பேசும்போது, அரசு விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பாதிப்படைகின்றனர். எனவே, விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது. தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். மாணவர்களை மதிப்பீடு செய்யும் பணியை நிறுத்த வேண்டும். இ.எம்.ஐ.எஸ். பணியில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மகாலட்சுமி, ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நிவாஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.