ஆசனூர் அருகே ஆவேசம் அடைந்து காரின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை


ஆசனூர் அருகே ஆவேசம் அடைந்த காட்டு யானை காரின் கண்ணாடியை உடைத்தது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே ஆவேசம் அடைந்த காட்டு யானை காரின் கண்ணாடியை உடைத்தது.

நெடுஞ்சாலையில் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளின் டிரைவர்கள் ரோட்டு ஓரம் கரும்பு கட்டுகளை போட்டு பழக்கிவிட்டதால், யானைகள் அடிக்கடி ரோட்டுக்கு வந்து விடுகின்றன. அதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் மறிப்பதும், துரத்துவதும் அரங்கேறி வருகின்றன.

கண்ணாடியை உடைத்தது

இந்தநிலையில் நேற்று ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் உலா வந்தன. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. ரோட்டில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள்.

அப்போது ஆவேசம் அடைந்த ஒரு யானை ரோட்டில் நின்றிருந்த ஒரு காரை நோக்கி ஆவேசமாக ஓடிவந்தது. பின்னர் காரின் முன்பக்க கண்ணாடியை துதிக்கையால் அடித்து உடைத்தது. காருக்குள் இருந்தவர்கள் பயத்தில் கத்தினார்கள். உடனே வனத்துறையினர் பட்டாசை வெடித்து யானையை விரட்டிவிட்டார்கள்.

இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக காருக்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து வாகனங்கள் செல்ல தொடங்கின.



Next Story