பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த 2 காட்டு யானைகள்-வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியறேிய 2 காட்டு யானைகள் நேற்று தண்டுகாரன அள்ளி ஏரிக்கு வந்தன. பின்னர் மாலை அந்த யானைகள் ஏரியில் இருந்து சென்று மாதம்பட்டி கிராமத்தில் சுற்றிதிரிந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனத்துறையினர் மாதம்பட்டி கிராமத்துக்கு விரைந்து சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யானை வேறு எங்கும் செல்லாமல் ஓரே இடத்தில் நிற்பதால் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய தோட்டங்களில் மின்இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் வரை கிராம மக்கள் யாரும் யானைகளின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.