பாலக்கோடு அருகே உடல் நலம் பாதித்தகர்ப்பிணி யானை பரிதாப சாவு


பாலக்கோடு அருகே உடல் நலம் பாதித்தகர்ப்பிணி யானை பரிதாப சாவு
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உடல்நலம் பாதித்த கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

கர்ப்பிணி யானை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கேசர்குழி வனப்பகுதியில் கடந்த 18-ந் தேதி 26 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதியடைந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து ஓசூர் வன கால்நடை உதவி மருத்துவ அலுவலர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கேசர்குழி வனப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு உடல்நலம் குன்றி இருந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.அதன்படி கடந்த 2 நாட்களாக யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

பரிதாப சாவு

இந்த நிலையில் கர்ப்பிணி யானை நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ், வன கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று அங்கேயே யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது இறந்த யானையின் வயிற்றில் இருந்து 12 மாத ஆண் யானை குட்டி இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டது.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையின்படி யானை இரைப்பை அலர்ஜி, வயிற்றில் அதிக புழுக்கள், பெருங்குடல் பாதிப்பு, வயிற்று போக்கு காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது.

உடல்நலக்குறைவால் யானை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த 1½ மாதங்களில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வகையில் இறந்த யானைகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.


Next Story