கிருஷ்ணகிரி அருகே கிராமத்துக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் ஏரியில் ஆனந்த குளியல் போட்டன


கிருஷ்ணகிரி அருகே  கிராமத்துக்குள் புகுந்த 3 காட்டு யானைகள்  ஏரியில் ஆனந்த குளியல் போட்டன
x
தினத்தந்தி 8 Dec 2022 6:45 PM GMT (Updated: 8 Dec 2022 6:45 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கிராமத்துக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.

3 யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 ஆண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என 3 காட்டு யானைகள் இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் சுற்றி வருகிறது.

இந்த யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்த நிலையில் 3 யானைகளும் நேற்று காலை கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் உள்ள பாலகுறி கிராமம் அருகில் வந்தன. அந்த பகுதியில் பாறையூர் ஏரிக்கு சென்ற 3 யானைகளும் ஏரியில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன.

அறிவுரை

பின்னர் ஒன்றன் மீது மற்றொன்று துதிக்கையால் தண்ணீரை அடித்து விளையாடியது. மேலும் தண்ணீரில் விளையாடிய சோர்வில் சிறிது நேரம் ஏரிக்கரையையொட்டி தண்ணீரில் யானைகள் படுத்துக் கொண்டன. இதை அந்த பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

நேற்று காலை 11 மணி அளவில் ஏரிக்குள் சென்ற யானைகள், மாலை வரை ஏரியை விட்டு வெளியே வரவில்லை. இந்த யானைகளை மாலை வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்தனர். மேலும் பாலகுறி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், ஏரிக்கரையோரம் வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.


Next Story