ஓசூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய 2 யானைகள் விவசாயிகள் கவலை


ஓசூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய 2 யானைகள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 17 March 2023 7:00 PM GMT (Updated: 17 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே விவசாய நிலங்களில் புகுந்து 2 யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 5 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமப்பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனிடையே நேற்று முன்தினம் வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 5 யானைகளில் 2 யானைகள் தனியாக பிரிந்து அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. பின்னர், அங்கு பயிரிடப்பட்டு இருந்த தக்காளி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.

விவசாயிகள் கவலை

இதை கண்டு பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பி விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்த யானைகளை விரட்டினர். இதையடுத்து 2 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டன.

சானமாவு பகுதியில் யானைகள் தொடர்ந்து விளைபயிர்களை சேதப்படுத்தி, அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story