கோழிகமுத்தி முகாமில் யானைகள் சிறப்பாக பராமரிப்பு: மலசர் இனத்தவர்களுக்கு 'கஜ் கவ்ரவ்' விருது

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சிறப்பாகபராமரித்து வரும் மலசர் இனத்தவர்களின் பணியை பாராட்டி மத்திய வனத்துறை ‘கஜ் கவ்ரவ்’ விருது அளித்துள்ளது.
பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சிறப்பாகபராமரித்து வரும் மலசர் இனத்தவர்களின் பணியை பாராட்டி மத்திய வனத்துறை 'கஜ் கவ்ரவ்' விருது அளித்துள்ளது.
யானைகள் பராமரிப்பு
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்கள் உள்ளன. இதில், உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தியில் வனத்துறையின் பழமையான யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் உள்ளனர். இந்த முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சி அளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணியை பாராட்டி மத்திய வனத்துறை அமைச்சகம் கஜ் கவ்ரவ் விருதை அறிவித்துள்ளது.
கும்கியாக மாற்ற பயிற்சி
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மலசர் இனத்தவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் யானை - மனித மோதல் ஏற்பட்ட பகுதிகளில் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தபடுகின்றன. சமவெளியில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைகள் பிடிக்கப்பட்டு, கோழிகமுத்தி முகாமில் சிறப்பாக பழக்கப்படுத்தபட்ட பின்னர் கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. சின்னதம்பி யானையும் அதில் ஒன்று. இதில் மலசர் இனத்தவர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
''கஜ் கவ்ரவ்'' விருது
இந்தியாவிலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள மாவூத்கள் மற்றும் காவடிகள் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக யானைகளை பராமரிக்கும் பணியில் உள்ள மலசர் இன மக்களுக்கு ''கஜ் கவ்ரவ்'' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது மலசர் இன மக்களில் சிறந்த முறையில் யானையை பராமரித்து வரும் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு வருகிற 12 -ந்தேதி உலக யானைகள் தினத்தன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவில் வைத்து விருது வழங்க உள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விருது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆண்டிலேயே அந்த விருதை ஆனைமலை புலிகள் காப்பகம் பெறுவது மகிழ்ச்சி அளிப்பதோடு பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






