விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
மகேந்திரமங்கலம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்து யானைகள் அட்டகாசம் செய்தன.
தர்மபுரி:
மகேந்திரமங்கலம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்து யானைகள் அட்டகாசம் செய்தன.
யானைகள் அட்டகாசம்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் வனப்பகுதியில் 2 பெண் யானைகள், ஒரு மக்னா யானை என 3 யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன. இதை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை கண்காணித்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறி 3 யானைகளும் மகேந்திரமங்கலம் வனப்பகுதியில் முகாமிட்டு விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது தெரியவந்தது.
விவசாயிகள் கோரிக்கை
இதையடுத்து 3 யானைகளையும் பஞ்சப்பள்ளி வழியாக ராயக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், ஊருக்குள் புகுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி கிராமங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.