தொழிற்சாலை பஸ் மோதி ஊழியர் படுகாயம்; 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம்


தொழிற்சாலை பஸ் மோதி ஊழியர் படுகாயம்; 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம்
x

தொழிற்சாலை வளாகத்திற்குள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் மீது தொழிற்சாலையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பஸ் பின் பக்கமாக இயக்கும்போது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிஷோர் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் விபத்துக்குள்ளான கிஷோர் குறித்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சக ஊழியர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்திற்குள் விபத்துக்குள்ளான கிஷோருக்கு நீதி கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுக் குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் மற்றும் ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விபத்துக்குள்ளான கிஷோருக்கு மருத்துவ செலவை தொழிற்சாலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். தற்போது கிஷோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உறுதிப்படுத்தியதையடுத்து சக ஊழியர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ்சை மப்பேடு போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story