ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்
பருவமழை பாதிப்புகளை தடுக்க ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
மயிலாடுதுறை;
பருவமழை பாதிப்புகளை தடுக்க ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறியதாவது: பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள், ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைக்க போதிய அளவு மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை துறை அலுவலர்கள், உடைப்புகள் ஏற்படும்போது மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்ய தேவையான மணல் மூட்டைகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
உயிர் காக்கும் மருந்துகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கக்கூடிய நிவாரண மையங்களான பள்ளி கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த கட்டிடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகளை மழைக்காலம் முழுவதும் போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பொக்லின் எந்திரங்கள், மரம் அறுக்கும் கருவி போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மீட்பு பணி
மீன்வளத்துறையினர் பேரிடர் கால அவசர செய்திகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ள காலங்களில் படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோரை அவசர காலத்தில் பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது வானிலை ஆய்வு மையத்திலிருந்து கிடைக்கும் தகவல்களை தெரிவித்து மீன்பிடிக்கச் செல்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீட்பு பணிக்கு தேவையான பைபர் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சுழற்சி முறையில் பணி
மின்தடைகளை சரியான அணுகுமுறைகளினால் சரிசெய்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க தேவையான பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.