கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்:141 பேருக்கு பணி நியமன ஆணைகலெக்டர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினர்


கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்:141 பேருக்கு பணி நியமன ஆணைகலெக்டர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினர்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

கடலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 141 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

கடலூர்


தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என 1173 பேர் வருகை தந்தனர்.

தொடர்ந்து அவர்களை 42 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கான நபர்களை தேர்வு செய்தனர். மொத்தம் 141 பேரை தேர்வு செய்தனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்..எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

வேலைவாய்ப்பு

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், இங்கு வேலைவாய்ப்பு பெற்றவர்கள், தங்களுடைய திறமைகளை கொண்டு தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அப்போது தான், இந்த நிறுவனங்கள் நமது மாவட்ட இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை தொடர்ந்து தர முன்வருவார்கள்.

2022-23 -ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க இளைஞர் திறன் விழா நடந்தது. இதில் 1000- க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் உத்தரவுப்படி 7 வட்டாரங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story