படித்த படிப்பிற்கேற்ப வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்விழுப்புரத்தில் திருநங்கைகள் வலியுறுத்தல்


படித்த படிப்பிற்கேற்ப வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்விழுப்புரத்தில் திருநங்கைகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

படித்த படிப்பிற்கேற்ப அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் திருநங்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம்


கூவாகம் திருவிழாவை காண விழுப்புரத்திற்கு திருநங்கைகள் நம்மிடம் பதிவு செய்த கருத்துக்கள் இதோ...

கல்வி- வேலைவாய்ப்பு

சென்னை சுதா:- வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த திருவிழாதான் எங்களுடைய வாழ்க்கையிலேயே மிகுந்த சந்தோஷமான நாள். இத்திருவிழாவிற்காக வருடத்தில் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆவலுடன் காத்திருப்போம். முன்பைவிட தற்போது திருநங்கைகள் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டு நிறையபேர் சுயதொழில் தொடங்கி செய்து வருகின்றனர். நாங்கள் ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் சென்று வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எங்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அதை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு அளித்தால் எங்கள் சமுதாயம் மேலும் முன்னேற வாய்ப்பாக அமையும். சமீபகாலமாக திருநங்கைகளை இந்த சமுதாயம் ஏற்றுக்கொண்டு வருகிறது. பெரும்பாலும் 90 சதவீத மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் எங்கள் குடும்பத்தினர் எங்களை ஏற்றுக்கொள்ளாததுதான் வருத்தமளிக்கிறது. அவர்களும் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகமான சலுகைகள்

சென்னையை சேர்ந்த மொபீனா:-

தி.மு.க. ஆட்சியில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்ததால் அனைவரிடத்திலும் எங்களுக்கென்று தனி மதிப்பு, மரியாதை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த கசப்பான அனுபவங்களை மறக்கும் அளவிற்கு நிறைய சலுகைகளை வழங்கியுள்ளனர். இதனால் இன்றைக்கு அனைத்து திருநங்கைகளும் தைரியமாக வெளியே வருகிறார்கள். இதற்காக நாங்கள் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், எங்களுக்காக நிறைய திட்டங்களை அறிவித்து எங்களை மேலும், மேலும் முன்னேற வைத்துள்ளார்.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

சேலத்தை சேர்ந்த பூஜா:-

ஒரு காலத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்று இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. எங்களில் நிறையபேர் அரசு துறை மற்றும் தனியார் துறைகளில் சாதித்து வருகின்றனர். எங்களில் அதிகம் பேர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். அவர்களின் படிப்பிற்கேற்ப அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழக அரசு, திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சுயதொழில் புரிய கடனுதவிகளும் வழங்கி வருகிறது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எங்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசுதான், ஆண்கள், பெண்கள் என பார்த்து சலுகைகள் அறிவிக்கின்றனரே தவிர திருநங்கைகளுக்கென்று எந்தவொரு சலுகைகளும் வழங்காதது கவலைக்கிடமாகவும், அதிருப்தியாகவும் இருக்கிறது. எனவே மத்திய அரசும், எங்களுக்கு சலுகைகளை வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story