ஈரோடு பெரும்பள்ளம் ஓடையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகள் இடித்து அகற்றம்


ஈரோடு பெரும்பள்ளம் ஓடையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

ஈரோடு

ஈரோடு பெரும்பள்ளம் ஓடையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

பெரும்பள்ளம் ஓடை

ஈரோட்டுக்கு பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய 2 ஓடைகளின் பெயரை வைத்தே ஈரோடை என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு ஈரோடு என்று அழைக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த ஓடையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

12 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும்பள்ளம் ஓடையில் 327 மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், 8 கிலோ மீட்டர் நீளத்துக்கு கம்பி வலை தடுப்புகளும், 25 இடங்களில் நீர்சரிவு அமைப்புகளும், ஓடையின் பக்கவாட்டில் 4 பூங்காக்களும், 2.4 கிலோ மீட்டர் நீளத்தில் இணைப்பு சாலைகளும், ஓடையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் 4 இடங்களில் பாலங்களும் அமைக்கப்படுகிறது.இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நோட்டீஸ்

ஓடையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் கேட்டும், மாற்று இடம் வழங்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோடு முனிசிபல்சத்திரம் குயவன்திட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாாிகள் நேற்று காலை சென்றனர். அங்கு ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து அகற்றினர்.

வீடுகள் அகற்றம்

நேற்று காலை 9.30 மணிஅளவில் 4 பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. ஒவ்வொரு வீடாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஆக்கிரமிப்பில் இருந்த மொத்தம் 32 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு ஈரோடு டவுன் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story