பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பாதை ஆக்கிரமிப்பு
சங்கரன்கோவில் தாலுகா பெரிய கோவிலான்குளம் வடக்கு தெரு மக்கள் பழனிவேல் முருகன் என்பவர் தலைமையில் கொடுத்த மனுவில், எங்களது தெரு கோ.மருதப்பபுரம் கிராமத்தில் உள்ளது. நாங்கள் வசிக்கும் பொதுப்பாதை வழியாக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த பாதை வழியாக மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் எங்களது வீட்டிற்கு வருகிறது. தற்போது சிலர் இந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்து செல்ல விடாமல் இடையூறு செய்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் மற்றும் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், "செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி 7-வது வார்டு பகுதியில் குடிநீர், சமுதாய நலக்கூடம் தெருவிளக்கு, வாறுகால் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடையநல்லூர் தாலுகா மடத்துப்பட்டி கிராமம் பாறைகுளம் பொதுமக்கள் சார்பில் சீனித்தாய் என்பவர் கொடுத்துள்ள மனுவில், வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை அதன் உரிமையாளர் கேட்பதால் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஆதித்தமிழர் கட்சி
ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன் கொடுத்த மனுவில், "கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர் பகுதியில் அருந்ததியர் சமூக மக்கள் வாசிக்கும் பகுதிக்கு கழிவுநீர் ஓடை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்த நிதியை வேறு பகுதிக்கு அமைத்துக் கொடுத்த பஞ்சாயத்து நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.