சிவகாசி பஸ் நிலையம் எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சிவகாசி பஸ்நிலையம் எதிரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
சிவகாசி,
சிவகாசி பஸ்நிலையம் எதிரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
பொத்தமரத்து ஊருணி
சிவகாசி பஸ் நிலையம் முன்பு பொத்தமரத்து ஊருணி உள்ளது. இந்த ஊருணிக்கு தண்ணீர் வரும் பாதைகள் அடைக்கப்பட்ட நிலையில் ஊருணியை சுற்றி உள்ள இடத்தினை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டி இருந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு அசோகன் எம்.எல்.ஏ. முயற்சியால் பொத்தமரத்து ஊருணி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த பணியில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தியது. இதில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விட்டு பொத்தமரத்து ஊருணியை தூர்வார வேண்டும் என்று மாநகராட்சி கவுன்சிலர் சபையர் ஞானசேகரன் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.
அகற்ற முடிவு
அதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் பொத்தமரத்து ஊருணி அருகில் உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் 18 கட்டிடங்கள் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நேற்று காலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்ற அதிகாரிகள் தயார் ஆனார்கள். அப்போது அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சி பிரமுகர்களும், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் அங்கு திரண்டு இருந்தனர். இதில் ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்தும், படுத்தும் தர்ணா செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதை தொடர்ந்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் குடியிருப்புகளை அகற்றாமல், வர்த்தக ரீதியாக செயல்பட்டு வரும் 8 கட்டிடங்கள் மட்டும் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.