ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்


ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

அதன்படி அவர் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையம் அருகே கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிரிவலப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு

கிரிவலப்பாதையில் கடைகள் ஓரம் தான் அதிக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கடைக்காரர்கள் குப்பைகளை அகற்றாமல் உள்ளனர். பக்தர்களுக்கு இடையூறாக பலர் நடைபாதையில் நிரந்தரமாக கடைகள் வைத்துள்ளனர். தற்காலிகமாக கடைகள் வைத்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை. நிரந்தரமாக வைப்பதால் தான் பிரச்சினைகள் எழுகிறது.

நிரந்தரமாக கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்தால் அதை அகற்ற வேண்டும். நிரந்தரமாக கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது. தள்ளுவண்டியில் கடை வைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம்.

காலையில் தள்ளுவண்டியை கொண்டு வந்து பொருட்களை விற்பனை செய்து விட்டு பின்னர் அந்த வண்டியை அங்கிருந்து கொண்டு சென்றுவிட வேண்டும்.

அதற்கு மாறாக பலர் நிரந்தரமாக கடைகளை அமைத்து வருகின்றனர். இதை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொண்டால் பலர் நிரந்தரமாக கடைகளை வைப்பதை தவிர்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கட்டிடம்

தொடர்ந்து அவர் அத்தியந்தல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் வைக்கவும், தோட்டம் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

அங்கன்வாடி மையம் புதிதாக அமைப்பது தொடர்பாகவும், அதுவரை அங்கன்வாடி மையம் அங்குள்ள பள்ளியில் தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து அவர் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் மந்தாகினி, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரித்விராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story