ஏரி, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ஏரி, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கீழ்பென்னாத்தூர்
ஏரி, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
தாசில்தார் சாப்ஜான், வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் கிருஷ்ணன், தோட்டக்கலை துறை அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் முத்தகரம் பழனிச்சாமி, வேட்டவலம் மணிகண்டன், அட்மா ஆலோசனை குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், இயற்கை விவசாயி சிறுநாத்தூர் கிருஷ்ணன், பொலக்குணம் சுப்பிரமணி, கணியாம்பூண்டி வரதராஜன், நீலந்தாங்கல் பாரதியார், கருங்காலிகுப்பம் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் கோபி, குணசேகர் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
ஆக்கிரமிப்புகள்
விவசாயிகளுக்கு விதை நெல் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கும் சட்டத்தை ரத்து செய்து 30 கிலோவாக வழங்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு தொகையை தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுந்தாழ் உர விதைகள் மானிய விலையில் கூடுதலாக வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ஏரிகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவைக்கேற்றார் போல் தோட்டக்கலை துறை மூலம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப விதைகள் வழங்க வேண்டும்.
சிறுநாத்தூர் பள்ளியில் குடிநீர் வழங்கவும், கழிவறை பழுதடைந்துள்ளதை சீரமைக்கவும் வேண்டும். ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாக மண் எடுக்கப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேகத்தடை
கரும்பு அறுவடை முடிவதற்குள் ஆலை அரவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு தேடி மருத்துவ திட்டத்தில் சித்த மருத்துவம் இடம்பெறச் செய்ய வேண்டும்.
வேட்டவலம்-வயலூர், வயலூர்-கீழ்பென்னாத்தூர் வரை உள்ள சாலையில் தேவயைற்ற பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க அவசியமற்ற வேகத்தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.