மணல் குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 3 நாட்கள் நடந்த அமலாக்கத்துறையினர் சோதனை முடிவடைந்ததையடுத்து அதிகாரிகள் ஆவணங்களை அள்ளிச்சென்றனர்.
3-வது நாள் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை அரசிடம் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இவர் மூலமாகத்தான் தமிழகம் முழுவதும் மணல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மணல் விற்பனையில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடைபெற்று அதன் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறைக்கு ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த 12-ந் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரன் வீடு, புதுக்கோட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனையை தொடங்கினர். பின்னர் ராமச்சந்திரன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை முடிந்தது. இதையடுத்து 3-வது நாளாக நேற்று ராமச்சந்திரன் அலுவலகத்தில் மட்டும் சோதனை நடைபெற்று வந்தது. அந்த சோதனையும் பகல் 12.15 மணி அளவில் முடிந்தது. .
பண்டல் பண்டலாக ஆவணங்கள்
இந்த சோதனையில் மணல் விற்பனையில் செய்த ரசீது புத்தகங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவை பண்டல் பண்டலாக சிக்கின. பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பாக கொண்டு ெசன்றனர்.
சம்மன்
சோதனை நடைபெறும் போது ராமச்சந்திரன் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்திற்கு வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் அணைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை செய்வதற்காக அவரை வரவழைப்பதற்கு அமலாக்கத்துறை கடந்த 2 தினங்களாக முயற்சி செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது தங்களுடைய சோதனையை நிறைவு செய்து ஆவணங்கள், ஆதாரங்கள், ரசீது புத்தகங்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ராமச்சந்திரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இன்று அல்லது நாளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராமச்சந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.