கோவை நகை வியாபாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை


கோவை நகை வியாபாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொப்னா சுரேஷிடம் தங்க கட்டிகள் வாங்கப்பட்டதா? என்று கோவை நகை வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோயம்புத்தூர்


சொப்னா சுரேஷிடம் தங்க கட்டிகள் வாங்கப்பட்டதா? என்று கோவை நகை வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் விமான நிலையத்தில் ரூ.13¾ கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த கடத்தல் சம்பவம் கேரளாவையே உலுக்கியது. இந்த வழக்கில் ஐக்கிய அமீரக முன்னாள் ஊழியரான சொப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

இந்த வழக்கில் சொப்னா சுரேசுக்கு உதவிய நபர்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகளான என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சொப்னா சுரேஷ் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அரபு நாடுகளில் இருந்து கிலோ கணக்கில் கடத்தி வரப்பட்ட தங்கம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் குறிப்பாக தென்னிந்தியாவில் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நகைகளாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

அமலாக்கத்துறையினர் விசாரணை

இதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கோவையில் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று மத்திய அமலாக்க துறை அதிகாரிகள், கோவை வந்தனர். சொப்னா சுரேசுக்கு தங்கம் விற்பனையில் உதவியதாக கோவையில் தங்க நகை பட்டறை நடத்தி வரும் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை மற்றும் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

ராஜ வீதி மற்றும் பவள வீதியில் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சோதனையில் 32 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2½ லட்சம் சிக்கியது. இது குறித்தும் விசாரனை நடத்தப்பட்டது.

தங்க கட்டிகள் வாங்கப்பட்டதா?

நந்த கோபாலிடம் தங்க கட்டிகள் வாங்கியது, விற்பனை செய்தது, ஆபரணம் தயாரித்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் தங்க கட்டிகளை யாரிடம் இருந்து வாங்கினார்.

சொப்னா சுரேஷை அறிமுகம் செய்தது யார்? அவருக்கு பணம், நகை, பொருட்கள் வழங்கப்பட்டதா? ஹவாலா மோசடியில் தங்க கட்டிகள் பெறப்பட்டதா? சொப்னா சுரேஷ் தங்க கட்டிகள் கொடுத்து பணம் வாங்கி சென்றாரா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நந்தகோபால் மும்பை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்து தொழில் செய்வதாக கூறியுள்ளார். சொப்னா சுரேஷ் குறித்த சில விவரங்களை அமலாக்க துறையினரிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story