பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யுங்கள் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யுங்கள்  விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:45 PM GMT)

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், நடப்பாண்டில் HDFC ERGO- பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில், சம்பா பருவ நெல் பயிருக்கு 751 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்

நெல் சம்பா, பருத்தி, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய 15.11.2022-ந் தேதி கடைசி நாள் எனவும், மக்காச்சோள பயிருக்கு 31.10.2022-ந் தேதி பிரிமியம் செலுத்தக் கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளுக்கு உட்பட்டு பதிவு செய்வதற்கான கடைசி நாள் மாற்றத்திற்கு உட்பட்டது.

எனவே விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பிரிமியத் தொகையினை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்யலாம். பயிர் காப்பீட்டுத் தொகையில் நெல் மற்றும் இதர வேளாண்மை பயிர்களுக்கு விவசாயிகள் 1.5 சதவீதமும், பருத்தி மற்றும் இதர பணப்பயிர்களுக்கு 5 சதவீதமும் பிரிமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

அதாவது ஏக்கருக்கு நெற்பயிருக்கு (நெல்-சம்பா) ரூ.552-ம், பருத்திக்கு ரூ.461-ம், மக்காச் சோளம் ரூ.331-ம் மற்றும் உளுந்து பயிருக்கு ரூ.271-ம் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தவறான பதிவுகள்

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது ஒரே சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை விவசாயிகள், உரிய பயிர் காப்பீட்டு நிறுவன முகவர் அல்லது தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story