மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பதிவு முகாம்


மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பதிவு முகாம்
x
தினத்தந்தி 6 Aug 2023 2:45 AM IST (Updated: 6 Aug 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பங்கள் செயலியில் பதிவு செய்யும் முகாம் தொடங்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பங்கள் செயலியில் பதிவு செய்யும் முகாம் தொடங்கியது.

விண்ணப்பங்கள் பதிவு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை அடுத்த மாதம் 15-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி முதற்கட்டமாக கிராமங்களில் விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆவணங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக நகராட்சி, பேரூராட்சிகளில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை வீடு, வீடாக சென்று விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பங்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினார்கள். இந்த நிலையில் நேற்று விண்ணப்பங்கள் செயலியில் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி குமரன் நகர் நகராட்சி பள்ளியில் 14, 15, 16 ஆகிய வார்டுகளில் உள்ள பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அங்கு நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:-

9-ந்தேதி முகாம் நிறைவு

பொள்ளாச்சி தாலுகாவில் நகராட்சி, பேரூராட்சிகளில் 51 ரேஷன் கடைகள் உள்ளன. 45 ஆயிரத்து 318 பயனாளிகள் உள்ளனர். பயனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. மேலும் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 41 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முதல் நாளில் 80 பேரின் விண்ணப்பங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டது. இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 500 பேர் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை, கோட்டூர் பேரூராட்சிகளில் 33 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 27 ஆயிரத்து 317 பயனாளிகள் உள்ளனர். முகாமில் பயனாளிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. முகாம் வருகிற 9-ந்தேதி நிறைவுபெறுகிறது.

மேலும் விண்ணப்பங்கள் வாங்காதவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story