வீடு புகுந்து தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு


வீடு புகுந்து தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
x

வீடு புகுந்து தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூரையடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி பாறைபட்டி தெருவை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகன் வினோத் என்ற கிருஷ்ணகுமார்(வயது 36). கார் டிரைவரான இவர், பேரூராட்சி தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திருவெறும்பூர் கக்கன் காலனி டாஸ்மாக் அருகே வந்துள்ளார். அப்போது அவரது உறவினர்களான கூத்தைப்பாரை சேர்ந்த பாஸ்கர்(40) மற்றும் ஆனந்த்(42) ஆகியோர் குமரேசபுரத்தை சேர்ந்த பாண்டியனின் மகன் அம்மாவாசை என்ற வினோத்திடம்(23) தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களை கிருஷ்ணகுமார் சமாதானப்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து வினோத், தனது நண்பர்களுடன் கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று, அரிவாளால் அவரது தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.


Next Story