பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி கொள்ளையடித்த 2 பேர் கைது


பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி கொள்ளையடித்த 2 பேர் கைது
x

பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் உதயகுமார் (வயது 30) காய்கறி வியாபாரி. இவருக்கு மாலதி (26) என்ற மனைவியும், தர்சிணி (8), ஹாருணி (6) என 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் 2 பேரும் பெரியபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை காலை உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்று விட்டார். அவரது 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிய வண்ணம், ரெயின் கோட் அணிந்து வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த மாலதியை கத்தியால் வெட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஆரணி போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில், உதயகுமாரின் உறவினர் மகனான மல்லியங்குப்பம் வேலன் தெருவில் வசித்து வரும் அருண்குமார் (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, போலீசார் நேற்று முன்தினம் அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சம்பவதன்று காலை அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆரணி அருகே உள்ள மங்களம் காலனியைச் சேர்ந்த ஜேபி (24) ஆகியோர் போந்தவாக்கம் டாஸ்மாக் கடை அருகே சந்தித்ததாகவும், அப்பொழுது அருண்குமார் தனது அண்ணன் முறையான உதயகுமாரின் மனைவி மாலதி வீட்டில் தனியாக உள்ளார். அவரது வீட்டில் நகைகள், பணம் உள்ளது. அவற்றை எளிதாக கொள்ளையடிக்கலாம் என்று நண்பர்கள் இருவரும் திட்டம் போட்டனர். பின்னர் அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் அருண்குமாரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து போந்தவாக்கம் டாஸ்மாக் கடை அருகே காத்திருந்த ஜேபியுடன் அருண்குமார் அவரது வீட்டுக்கு சென்று ரத்தகரை அடைந்த சட்டையை மாற்றிக்கொண்டு ஒன்றும் தெரியாததை போன்று ஊருக்குள் சுற்றி திரிந்ததை அருண்குமார் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் படி தங்க நகைகளையும், ரொக்க பணத்தையும் போலீசார் மீட்டனர். மேலும், ஜேபியை கைது செய்து குற்றவாளிகள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story